Skip to main content

அகத்தியர் சொல்லும் வேம்பின் பெருமை

பொதுவாகவே வேப்ப மரத்தின் அரும் பெரும் குணங்கள் தற்போது பலருக்கு தெரியாது.

அப்படித் தெரிந்தாலும் அது அம்மரத்தைப் பற்றிய பொதுவான குணமாகவே இருக்கும்.

வேம்பைப் பற்றி அகத்தியர் இயற்றிய நூல்களில் தத்துவம் முன்னூறு என்ற நூலில் மூன்றாவது ஞானகாண்டத்தில் வேம்பின் பெருமையை மிக அழகாகக் கூறுகிறார்.

“பாரப்பா வேம்பினூட பிறப்பைக் கேளு
பணியனையன் பாலாழி யமுர்தம் தனை
நேரப்பா பெண்ணுருவாய் தேவர்க்குப் படைத்தார்
நிகரில்லா ராட்சதர்கள் பெண்ணைப் பார்த்து
சாரப்பா மயங்கி நின்ற ரசுரர்ககளி லொருவன்
தானவர்கள் பந்தியிலே வந் திருந்த தாலே
சேரப்பா தேவருடன் கலந்திருந்த தாலே
திருமாலு மூன்றகப்பை படைத்தான் கேளே.”

விளக்கம் :-

வேம்பின் பிறப்பைப் பற்றிக் கூறுகிறேன் கேளு, திருமால் பெண்ணுருவம் கொண்டு அமிர்தத்தை தேவர்களுக்கு அகப்பையினால் பங்கிடும் போது, அசுரர்கள் அந்தப் பெண்ணின் அழகைக் கண்டு மயங்கி இருக்கையில், அசுரர்களில் ஒருவன் யாருக்கும் தெரியாமல் தேவர்கள் பந்தியில் வந்து அமர்ந்துவிட, திருமாலும் தேவர்களின் வரிசையில் தேவர்களைப் போல இருந்த அசுரனுக்கும் மூன்றகப்பை அமிர்தத்தைக் கொடுத்து விடுகிறார்.

“படைத்திட்ட பெருமாலாம் பெண்ணி னோடு
பருதி மதி யசுரனவ ரென்ற போது
உடைத்திட்ட அசுரனவன் னமுர்த முண்ண
ஓரடியா யாகப்பையினால் வெட்டினார் மால்
படைத்திட்ட யிரண்டாகி ரவி மதிக்கு
பகையாகி ராகுகே துக்களேன்றே சர்ப்பமானார்
அடைத்திட்ட அகப்பையினால் வெட்டும் போது
அவன்வா யாலமுர்த்த மாதைக் கக்கி னானே. ”

விளக்கம் :-

அமிர்தத்தை கொடுத்த திருமாலுக்கு அருகிலிருந்த சூரியனும், சந்திரனும், அவன் அசுரன் என்று ஜாடை காட்டிச் சொல்ல, அமிர்தத்தை சாப்பிட்டுக் கொண்டு இருந்த அசுரனை நோக்கித் திருமால் அகப்பையால் வெட்டி விட, அசுரன் தலை வேறு உடல் வேறாக வெட்டப்பட்டு, அடையாளம் காட்டிக் கொடுத்த சூரிய சந்திரர்களுக்கு பகைக் கிரகமான ராகு, கேது என மாறினார்கள்.
அகப்பையினால் வெட்டுப்படும் போது அசுரன் தனது வாயில் மீதமாக இருந்த அமிர்தத்தைக் கக்கினான்.

“கக்கும்போ தமூர் தமது லிங்கம், போலக்
காசினியில் விழுந்ததுவே வேம்பு மாச்சு
முக்கியமாய்க் கசப்பு வந்த தேதென்றாகால்
முனையசுரன் வாயில் நின்று வீழ்ந்ததாலே
சக்கியமாய் வேம்பு தின்றால் சாவோ யில்லை
சனகாதி நால்வருடன் யானுந் தின்று
அக்கண மேசித்திபெற் றவேம்பு நேர்மை
ஆரறிவா ருலகத்தோ ரறியார் காணே.”

விளக்கம் :-

கக்கும்போது அசுரனின் வாயிலிருந்து பூமியில் விழுந்த அமிர்தமானது வேப்பமரமானது. வேம்புக்கு கசப்புச்சுவை வந்த காரணம் என்ன வென்றால், அசுரனின் (பாம்பின்) நச்சு வாயிலிருந்து வெளிப்பட்டதால் தான். அப்படிப் பட்ட வேம்பை உண்டு வந்தால் மனிதனுக்கு சாவு என்பதே கிடையாது. இப்படிதான் சனகாதி நால்வருடன் ( என் குருமார்கள் நால்வருடன்) சேர்ந்து நானும் சாப்பிட்டு காயசித்தி பெற்றேன். இப்படிப்பட்ட வேம்பின் பெருமையை இந்த உலகத்தில் யார் அறிவார் என்று மிகதெளிவாக வேம்பின் பெருமையை அகத்தியர் தெளிவுபடக் கூறுகிறார்.

காயசித்தி :- காயம் என்றால் உடம்பு சித்தி என்றால் சித்திக்கும், ஆகவே, அழிவில்லா உடல் சித்திக்கும் என்று பொருள்.

Comments

Popular posts from this blog

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்.

சித்தர் பட்டினத்தார் பாடல்... மனிதனாகப் பிறந்தவன் ஏராளமான பிழைகளைச் செய்கிறான். அந்தப் பிழைகளைப் பொறுத்து அருளும் படி ஈசனை வேண்ட வேண்டும். நிலையற்ற காரியங்களே பெரிதென்று எண்ணி அந்த மாயையில் மயங்கிவிடக் கூடாது. இதை ஒரு சிறந்த பாடல் மூலம் மக்களுக்கு உணர்த்துகிறார் பட்டினத்தார்... "கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்நின் ஐந்தெழுத்தை சொல்லாப் பிழையும் துதியாப்பிழையும் தொழாப் பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சி யேகம்பனே." இறைவனோடு மனிதன் கொள்ளவேண்டிய தொடர்பு பற்றி மிக அழகாக சொல்லி இருக்கிறார் பட்டினத்தார். பட்டினத்தார் சிறந்த சிவபக்தர். "நமசிவாய"என்ற ஐந்தெழுத்தையும் திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் இறை உண்மையை உணர முடியும் என்பதையும், பிழைகளை செய்தாலும் நெஞ்சம் கசிந்துருகி இறைவனை வேண்டினால் எல்லாப் பிழைகளையும் பொறுத்து அருள்வான் என்பதையும் இப்பாடலில் உணர்த்துகிறார். பேரின்பப் பெரும் பதவியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டினத்தார் சொல்லுகின்ற முறை தானே அழகாகும். ஆழமான கருத்துக்கள், அழகான ...

உஞ்ச விருத்தி என்பது என்ன?

தலையில் சிவப்பு வஸ்திரம் கட்டியபடி இடது இடுப்பில் செம்பையும் காலில் சலங்கையும் கட்டிக் கொண்டு கிருஷ்ண பஜனை பாடி வீடுவீடாய் சென்று தானம் கேட்பது தான் உஞ்ச விருத்தி. இப்படி வந்தால் கிருஷ்ண பகவானே தானம் கேட்டு வருவ தாக ஒரு ஐதீகம். உஞ்சவிருத்தி எடுப்பவர்களுக்கு பச்சரிசியைத்தான் தானமாக கொடுப்பார்கள். உஞ்ச விருத்தி கேட்பவர்கள் இடுப்பில் இருக்கும் செம்பு நிரம்பிவிட்டால் இருப்பிடம் திரும்பிவிடுவார்கள். அன்றைக்குத் தேவையான தானியத்தை மட்டுமே யாசகமாகப் பெற வேண்டும் என்பது உஞ்சவிருத்தியின் தாத்பரியம். இருபது வயதில் தனது தந்தையின் வழியில் உபன்யாசம் படிக்கப் புறப்பட்ட திருச்சி கல்யாணராமன் கடந்த நாற்பது ஆண்டுகளாக தினமும் உஞ்சவிருத்தி எடுத்து அதன்மூலம் கிடைக்கும் பச்சரிசியைத்தான் சமைத்து உண்கிறார். “ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற மகான்கள் எல்லாம் உஞ்சவிருத்தி எடுத்தார்கள். நான் வெளியூர்களுக்குப் போனால் ஓட்டல்களில் தங்குவதில்லை. முதியோர் இல்லங்கள் தான் நமக்குச் சொர்க்கம். உஞ்சவிருத்தி எடுப்பவர்கள் செம்பு நிரம்பிவிட்டால் அதற்கு மேல் தானம் கேட்கக்கூடாது. ஆனால், நான் ஒரு தெருவில் இறங்கினால் இரண்டு மூட...

அரிது அரிது

"அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது அதனினும் தானமும் தவமும் பெறுதல் அரிது தவம் பெற்றவர்க்கே வானவர் நாடுவழிதிறந்திடுமே." - ஔவை தவமே ஞானத்தைத் தரும். ஞானமே உண்மையான அமைதியைத் தரும். தொடர்ந்த பிறப்பால் சலித்து பிறவாநிலையை மனம் நாடும் போது, அதற்கான உபாயங்களாக நம் சித்தர்களும் ஞானிகளும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நாலு வழிகளைக் காட்டுகிறார்கள். இதில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்தாலும் மற்ற மூன்றும் தானே தொடரும். திருஞான சம்பந்தர் சரியை மார்க்கத்தையும், நாவுக்கரசர் கிரியை மார்க்கத்தையும், சுந்தரர் யோக மார்க்கத்தையும், மாணிக்கவாசகர் ஞான மார்க்கத்தையும் கடைபிடித்து வாழ்ந்து காட்டி மெய்நிலை அடைந்தார்கள். இந்த சரியையும், கிரியையும் வெளிப்படையானது. யோகமும் ஞானமும் மறை பொருளாக உள்ளது. தியானம் பயில விரும்புபவர்கள் இவைகளைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். சரியை - எந்நேரமும் இறை நம்பிக்கையோடு இருப்பது. பக்தியுடன் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகள் செய்வது. புராண, இதிகாசங்கள் படிப்ப...