Skip to main content

அரிது அரிது

"அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது அதனினும்
தானமும் தவமும் பெறுதல் அரிது
தவம் பெற்றவர்க்கே வானவர் நாடுவழிதிறந்திடுமே."

- ஔவை

தவமே ஞானத்தைத் தரும்.

ஞானமே உண்மையான அமைதியைத் தரும்.

தொடர்ந்த பிறப்பால் சலித்து பிறவாநிலையை மனம் நாடும் போது, அதற்கான உபாயங்களாக நம் சித்தர்களும் ஞானிகளும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நாலு வழிகளைக் காட்டுகிறார்கள்.

இதில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்தாலும் மற்ற மூன்றும் தானே தொடரும்.

திருஞான சம்பந்தர் சரியை மார்க்கத்தையும், நாவுக்கரசர் கிரியை மார்க்கத்தையும், சுந்தரர் யோக மார்க்கத்தையும், மாணிக்கவாசகர் ஞான மார்க்கத்தையும் கடைபிடித்து வாழ்ந்து காட்டி மெய்நிலை அடைந்தார்கள்.

இந்த சரியையும், கிரியையும் வெளிப்படையானது.

யோகமும் ஞானமும் மறை பொருளாக உள்ளது.

தியானம் பயில விரும்புபவர்கள் இவைகளைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.

சரியை - எந்நேரமும் இறை நம்பிக்கையோடு இருப்பது.

பக்தியுடன் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகள் செய்வது.

புராண, இதிகாசங்கள் படிப்பது அல்லது கேட்பது.
மந்திரங்கள் ஓதுவது.
பக்தர்களுடன் கூடி பஜனைகள் பாடுவது.
அன்றாடம் பூஜை புனஸ்காரங்கள் செய்வது.
நாம ஜெபம் செய்வது.
உடலையும், உள்ளத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்வது.

மொத்தத்தில் பக்தி, ஒழுக்கம், நன்னடத்தை, நற்குணம், நற்பண்பு, நல்லெண்ணம், சத்சங்கம், இவையெல்லாம் சரியையாகும்.
இதுவே இச்சா சக்தி. இதில் இறைவனே தாயும், தந்தையுமாவார். சாதகன் புத்திரனாவார்.

கிரியை - கடவுளுக்கு மாலைகள் தொடுப்பதில் தொடங்கி கும்பாபிஷேகம் செய்வதுவரை கிரியை நெறி எனக் கொள்ளலாம். அலய உழவாரப் பணிகள், அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள், அடியார்களுக்குத் தொண்டு செய்வது, எல்லா உயிர்களையும் சமமாகபாவித்து அவர்களுக்கு உதவி செய்வது, அன்னதானங்கள் செய்வது, யாகங்கள் செய்வது, தர்மம், நீதிநெறி தவறாமல் நடப்பது, பணிவு, தியாகம் இவை யாவும் கிரியைகளாகும். இதுவே கிரியா சக்தி. இதில் இறைவன் ஆண்டான் சாதகன் அடிமை.

யோகம் - தன்னை உணர்ந்து தன்னுள் உறையும் தலைவனையும் உணர்ந்து ஒலியால் கனலையும் அனலையும் கூட்டி ஒளியேற்றுவதே யோகம்.

குருவைத் தேடுவது, உடல் இயக்கம் உயிர் இயக்கம் பற்றி உணர்தல், தத்துவங்களை புரிந்து கொள்தல், உண்மையாக இருத்தல், தனித்து பசித்து விழித்திருத்தல், காற்றைப் பிடித்தல், ஆன்மாவை இறையோடு சேர்த்தல் இவையெல்லாம் யோகமே.

ஆசனங்கள், வாசி யோகம், ராஜயோகம், குண்டலினி யோகம், பரியங்க யோகம், ஹடயோகம், அஷ்டாங்க யோகம், எனறு யோகத்தில் பல வகைகள் இருக்கின்றன.

யோகத்திற்கு விடாமுயற்சி, வைராக்யம், கடுமையான பயிற்சி அவசியம். இதனால் மனம் வசப்படும். திறமையும் ஆற்றலும் பெருகும். பிணிகளும், வினைகளும் அகலும். இதுவே யோக சக்தியாகும்.

இதில் இறைவனும் சாதகனும் நண்பர்கள்.

ஞானம் - தன்னிலை அறிந்து, தன்னை மறந்து, சும்மா இருந்து, மெய்யறிவு பெறுவதே ஞானம் தியானம், மெய்ப்பொருள், மௌனம், அமைதி, ஆனந்தம், அற்புதங்கள் யாவும் ஞானக் கலைகளே.

தான் என்ற தற்பரத்தை உணர்ந்து எல்லாம் ஒன்றென்றுணர்ந்து தவநிலை நாட்டுவது, பற்றறுத்து துறவு பூணுவது, மனதை வசப்படுத்தி அதிலேயே அடங்குவது, சாந்தம், தயவு, கருணை, பேரருள், நிதானம் யாவும் ஞானமே. இதுவே ஞான சக்தி. இதில் இறைவன் சற்குரு சாதகன் சீடன்.

பொதுவாக சரியை என்பது பக்தி. கிரியை என்பது தொண்டு. யோகம் என்பது வாசி. ஞானம் என்பது தியானம். இதனையே சித்தர்கள் சரியையில் பக்தி, சரியையில் தொண்டு, சரியையில் யோகம், சரியையில் ஞானம், கிரியையில் பக்தி, கிரியையில் தொண்டு, கிரியையில் யோகம், கிரியையில் ஞானம், யோகத்தில் பக்தி, யோகத்தில் தொண்டு, யோகத்தில் யோகம், யோகத்தில் ஞானம், ஞானத்தில் பக்தி, ஞானத்தில் தொண்டு, ஞானத்தில் யோகம், ஞானத்தில் ஞானம், மும்மலங்கள் நீங்கப் பெறுவது, சரணாகதி என்று பதிணெட்டு நிலைகளாக உணர்ந்து பயின்று இறை அனுபூதி பெற்று அஷ்டமா சித்திகளும் அடைந்தார்கள்.
தன்னை உணர்ந்தவர்கள்தான் பரம்பொருளை உணரமுடியும்.

இதையே திருமூலர்...

தன்னை அறிய தனக்கோர் கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்த பின்
தன்னையே அர்ச்சிக்கத் தானிருந்தானே. என்கிறார்.

ஆக தன்னை உணர்தலே ஞானம்.

Comments

Popular posts from this blog

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்.

சித்தர் பட்டினத்தார் பாடல்... மனிதனாகப் பிறந்தவன் ஏராளமான பிழைகளைச் செய்கிறான். அந்தப் பிழைகளைப் பொறுத்து அருளும் படி ஈசனை வேண்ட வேண்டும். நிலையற்ற காரியங்களே பெரிதென்று எண்ணி அந்த மாயையில் மயங்கிவிடக் கூடாது. இதை ஒரு சிறந்த பாடல் மூலம் மக்களுக்கு உணர்த்துகிறார் பட்டினத்தார்... "கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்நின் ஐந்தெழுத்தை சொல்லாப் பிழையும் துதியாப்பிழையும் தொழாப் பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சி யேகம்பனே." இறைவனோடு மனிதன் கொள்ளவேண்டிய தொடர்பு பற்றி மிக அழகாக சொல்லி இருக்கிறார் பட்டினத்தார். பட்டினத்தார் சிறந்த சிவபக்தர். "நமசிவாய"என்ற ஐந்தெழுத்தையும் திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் இறை உண்மையை உணர முடியும் என்பதையும், பிழைகளை செய்தாலும் நெஞ்சம் கசிந்துருகி இறைவனை வேண்டினால் எல்லாப் பிழைகளையும் பொறுத்து அருள்வான் என்பதையும் இப்பாடலில் உணர்த்துகிறார். பேரின்பப் பெரும் பதவியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டினத்தார் சொல்லுகின்ற முறை தானே அழகாகும். ஆழமான கருத்துக்கள், அழகான ...

உஞ்ச விருத்தி என்பது என்ன?

தலையில் சிவப்பு வஸ்திரம் கட்டியபடி இடது இடுப்பில் செம்பையும் காலில் சலங்கையும் கட்டிக் கொண்டு கிருஷ்ண பஜனை பாடி வீடுவீடாய் சென்று தானம் கேட்பது தான் உஞ்ச விருத்தி. இப்படி வந்தால் கிருஷ்ண பகவானே தானம் கேட்டு வருவ தாக ஒரு ஐதீகம். உஞ்சவிருத்தி எடுப்பவர்களுக்கு பச்சரிசியைத்தான் தானமாக கொடுப்பார்கள். உஞ்ச விருத்தி கேட்பவர்கள் இடுப்பில் இருக்கும் செம்பு நிரம்பிவிட்டால் இருப்பிடம் திரும்பிவிடுவார்கள். அன்றைக்குத் தேவையான தானியத்தை மட்டுமே யாசகமாகப் பெற வேண்டும் என்பது உஞ்சவிருத்தியின் தாத்பரியம். இருபது வயதில் தனது தந்தையின் வழியில் உபன்யாசம் படிக்கப் புறப்பட்ட திருச்சி கல்யாணராமன் கடந்த நாற்பது ஆண்டுகளாக தினமும் உஞ்சவிருத்தி எடுத்து அதன்மூலம் கிடைக்கும் பச்சரிசியைத்தான் சமைத்து உண்கிறார். “ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற மகான்கள் எல்லாம் உஞ்சவிருத்தி எடுத்தார்கள். நான் வெளியூர்களுக்குப் போனால் ஓட்டல்களில் தங்குவதில்லை. முதியோர் இல்லங்கள் தான் நமக்குச் சொர்க்கம். உஞ்சவிருத்தி எடுப்பவர்கள் செம்பு நிரம்பிவிட்டால் அதற்கு மேல் தானம் கேட்கக்கூடாது. ஆனால், நான் ஒரு தெருவில் இறங்கினால் இரண்டு மூட...