Skip to main content

சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில் - களக்காடு.

நெல்லை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி, களா மரங்கள் நிறைந்த காட்டுப்பகுதியாக இருந்ததால், அது திருக் களந்தை என்று அழைக்கப்பட்டது. அந்தக் களக்காடு திருத்தலத்தில், அன்னை கோமதியுடன் கோயில் கொண்டிருக்கிறார் அருள்மிகு சத்தியவாகீஸ்வரர். 

தேவர்கள், சித்தர்கள், முனிவர்கள் வழிபட்ட இந்த ஆலயம் கி.பி. 12ம் நூற்றாண்டில், வீரமார்த்தாண்டவர்மன் என்னும் மன்னனால் கட்டப்பட்டது. ராவணன் சீதையைக் கவர்ந்து சென்ற இடமான இத்தலம் 'சோரகாடவி’ என்றும் அழைக்கப்படுகிறது.

சீதையின் பிரிவால் வருந்திய ராமன், ஒரு புன்னை மரத்தின் நிழலில் குடிகொண்டிருந்த சிவபெருமானை வழிபட, 'சீதையை மீட்டு வர யாம் துணையிருப்போம்’ என்று சத்தியவாக்கு அருளினார் ஈசன். பின்னர், சீதையை மீட்டுக் கொண்டு ராமன் இத்தலத்துக்கு வந்து, இங்குள்ள இறைவனுக்கு 'சத்தியவாகீசப் பெருமான்’ எனத் திருநாமம் சூட்டி வணங்கிச் சென்றார் என்பது தல வரலாறு.

ஒரு போரின்போது, தேவர்கள் இங்குள்ள இறைவனை வழிபட்ட பிறகே, ஈசன் துணையுடன் அசுரர்களைப் போரில் வென்றதாகவும் சொல்லப்படுகிறது. இங்குள்ள தீர்த்தத்துக்கு 'சத்திய தீர்த்தம்’ என்று பெயர்.

களக்காடு ஈஸ்வரர் கோயில்:

நெல்லை மாவட்டம் களக்காட்டில் உள்ள சத்யவாஹீஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்திபெற்றது. ஒருமுறை ஸ்ரீராமருக்கு சத்திய வாக்கு தந்து, அதை நிறைவேற்றிய காரணத்தால் "பொய் சொல்லா மெய்யர்'' என்றும் அழைக்கப்படுகிறார்.

*ராஜகோபுர சிறப்பு:*

156 அடி கொண்டது இக்கோவில் ராஜகோபுரம். காண்போர் விழிகளை ஆச்சரியத்தின் விளிம்பிற்கு கொண்டு செல்லும் இக்கோபுரம் 9 அடுக்குகளைக் கொண்டது. இதன் உச்சியில் 9 கலசங்களும், பெரிய யாழிகளும் உள்ளன. ஆகம விதிப்படி அமைக்கப்பட்டுள்ள கோபுரம் பெயருக்கு ஏற்றவாறு ராஜகம்பீரத்துடன் காட்சியளித்து வருகிறது.
கோபுரத்தின் உட்பகுதியில், புராண இதிகாச கதைகளை விளக்கும் படங்கள், இறைவனின் திருவிளையாடல் படங்கள் பல்வேறு வண்ணங்களில் வரையப்பட்டுள்ளன. இந்த பழங்கால ஓவியங்கள், எக் காலத்தாலும் அழியாத கலர் பூச்சுக்களால் வரையப்பட்டுள்ளது சிறப்புமிக்கது.

இக்கோபுரத்தின் நிழல் கீழே விழாதவாறு அமைக்கப்பட்டுள்ளது அற்புத தொழில்நுட்பம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

_*சத்யவாஹீஸ்வரர்-கோமதி அம்மன் தல வரலாறு:*_

கி.பி.11-ம் நூற்றாண்டில் களக்காட்டை தலைநகரமாகக் கொண்டு நல்லாட்சி நடத்தி வந்த வீரமார்த்தாண்ட சேரர் என்ற மன்னன், காண்போர் வியக்கும் வண்ணம் இக்கோவிலை கம்பீரத்துடன் கட்டியுள்ளார். இக்கோவில் கட்டிய காலத்தில் தான், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயமும் கட்டப்பட்டதாக சில தகவல்கள் சொல்கின்றன.

வீரமார்த்தாண்ட சேர மன்னர், திருப்புடைமருதூர் என்ற தலத்திலும் ஒரு கோவில் அமைத்து, குறிப்பிட்ட சில தினங்கள் மட்டும் களக்காடு அரண்மனையில் இருந்து, குதிரையில் திருப்புடை மருதூர் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டுத் திரும்புவாராம்.

இப்படி ஒரு நாள் செல்லும்பொழுது, களக்காட்டில் ஓடும் (இப்போதும் இந்த ஆறு இங்கே பாய்கிறது) பச்சையாற்றில் அளவிற்கு அதிகமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால், ஆற்றைக் கடந்து, திருப்புடைமருதூருக்கு சாமி தரிசனத்திற்கு செல்ல முடியவில்லை. `இன்று சாமி தரிசனம் செய்ய முடியாமல் போய்விட்டதே...' என்று மன்னர் வருந்தினார்.
அப்போது, `கவலைப்படாதே! இங்குள்ள (களக்காடு) புன்னை மரத்தடியில் நாம் இருக்கிறோம். அங்கு எமக்கு ஒரு கோவில் அமைத்து வழிபடலாம்' என்று அசிரீரி கேட்டதாம்.
அதன்பிறகே அந்த லிங்கத்தைக் கண்டுபிடித்து அங்கே யாவரும், மூவரும், தேவரும் போற்றுகின்ற ஒரு கோவிலைக் கட்டினார் மன்னர் வீரமார்த்தாண்ட சேரர். அந்தக் கோவில்தான் களக்காடு ஸ்ரீசத்யவாஹீஸ்வரர் கோவில்.

*ஸ்ரீராமன் வழிபட்ட லிங்கம்:*

இங்குள்ள புன்னை மரத்தடியில் எழுந்தருளியிருந்த லிங்கம் தனிப்பெருமை வாய்ந்தது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற தனிப்பெரும் தத்துவத்தை நிலைநாட்ட உலகில் அவதரித்த அலங்காரப்பிரியன், அடியார்க்கு இனியன், அந்தரங்கம் அறிந்திட்ட ரெங்கன், நான்மறை வேதங்கள் போற்றிடும் நாராயணன், மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீராமர், சீதையைத் தேடிஅலைந்தபோது களக்காடு வந்து இந்த லிங்கத்தை வழிபட்டார்.

அப்போது `சீதை கிடைப்பாள்' என்று சத்யவாக்கு கிடைத்தது. அதன்படி சீதையை மீட்ட ராமர், மீண்டும் சீதையுடன் வந்து, அந்த லிங்கத்திற்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தினார்.
ராமருக்கு சத்யவாக்கு கொடுத்ததால், அந்த லிங்கமே சத்யாஹீஸ்வரர் என்று பெயர் பெற்றது. "பொய் சொல்லா மெய்யர்'' என்ற பெயர், இந்த சிவனுக்கு உண்டு!

அந்த லிங்கத்தை வைத்துதான், வீரமார்த்தாண்ட மகாராஜா இக்கோவிலை கட்டினார். இந்த தகவல்கள் `களந்தைப்புராணம்' என்று நூலில் காணப்படுகின்றன.

*ஆலய அமைப்பு:*

கோவிலுக்குள் நுழைந்தவுடன் நம்மை வரவேற்பது ராஜகோபுரம்தான். அதனையடுத்து இடதுபக்கம் ஒரு பொற்றாமரைக் குளமும், வலது பக்கம் மீனாட்சி சொக்கநாதர் சன்னதிகளும் உள்ளன. 631 அடி நீளமும், 293 அடி அகலமும் கொண்டதாகத் திகழும் இக்கோவில் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

ராஜகோபுரம் தவிர மேலும் 4 கோபுரங்கள் கோவிலில் உள்ளன. இக்கோவில் அபிஷேகப்பிரியரான சுவாமி, சத்யவாஹீஸ்வரராகவும், அம்பாள் கோமதி அம்மையாகவும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார்கள்.

இப்பகுதி பக்தர்களால் `பெரிய கோவில்' என்று செல்லமாக அழைக்கப்படும் இக்கோவிலின் உட்பகுதியில் ஸ்ரீசத்யவாஹீஸ்வரர், கோமதி அம்மன் சன்னதிகள் தவிர, விநாயகர், ஸ்ரீநவநீத கிருஷ்ணர், அய்யப்பன், துர்க்கையம்மன், ஜூரதேவர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், கஜலட்சுமி, சந்தன நடராஜர், அன்னலட்சுமி, சூரியன், சந்திரன், அதிசய சித ்ர குப்தர் உள்ளிட்ட தெய்வங்களுக்கும் தனி சன்னதிகள் அமைந்துள்ளன.

தமிழகத்தில் விரல்விட்டு சொல்லக்கூடிய சில முக்கியமான கோவில்களில் மட்டுமே 63 நாயன்மார்களுக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டிருக்கும். இந்த களக்காட்டு கோவிலிலும் 63 நாயன்மார்களுக்கு தனிசன்னதி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

*அமைவிடம்:*

நாகர்கோவில் பாபாநாசம் செல்லும் பாதையில் களக்காடு அமைந்துள்ளது. திருநெல்வேலி பஸ் நிலையத்தில் இருந்து இங்கு செல்ல பஸ்கள் இயக்கப்படுகின்றன. நான்குநேரியிலிருந்து 12 கி.மீட்டர் தொலைவில் களக்காடு அமைந்துள்ளது.

கோவில் திறந்திருக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் 7 மணி வரை.

Comments

Popular posts from this blog

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்.

சித்தர் பட்டினத்தார் பாடல்... மனிதனாகப் பிறந்தவன் ஏராளமான பிழைகளைச் செய்கிறான். அந்தப் பிழைகளைப் பொறுத்து அருளும் படி ஈசனை வேண்ட வேண்டும். நிலையற்ற காரியங்களே பெரிதென்று எண்ணி அந்த மாயையில் மயங்கிவிடக் கூடாது. இதை ஒரு சிறந்த பாடல் மூலம் மக்களுக்கு உணர்த்துகிறார் பட்டினத்தார்... "கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்நின் ஐந்தெழுத்தை சொல்லாப் பிழையும் துதியாப்பிழையும் தொழாப் பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சி யேகம்பனே." இறைவனோடு மனிதன் கொள்ளவேண்டிய தொடர்பு பற்றி மிக அழகாக சொல்லி இருக்கிறார் பட்டினத்தார். பட்டினத்தார் சிறந்த சிவபக்தர். "நமசிவாய"என்ற ஐந்தெழுத்தையும் திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் இறை உண்மையை உணர முடியும் என்பதையும், பிழைகளை செய்தாலும் நெஞ்சம் கசிந்துருகி இறைவனை வேண்டினால் எல்லாப் பிழைகளையும் பொறுத்து அருள்வான் என்பதையும் இப்பாடலில் உணர்த்துகிறார். பேரின்பப் பெரும் பதவியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டினத்தார் சொல்லுகின்ற முறை தானே அழகாகும். ஆழமான கருத்துக்கள், அழகான ...

உஞ்ச விருத்தி என்பது என்ன?

தலையில் சிவப்பு வஸ்திரம் கட்டியபடி இடது இடுப்பில் செம்பையும் காலில் சலங்கையும் கட்டிக் கொண்டு கிருஷ்ண பஜனை பாடி வீடுவீடாய் சென்று தானம் கேட்பது தான் உஞ்ச விருத்தி. இப்படி வந்தால் கிருஷ்ண பகவானே தானம் கேட்டு வருவ தாக ஒரு ஐதீகம். உஞ்சவிருத்தி எடுப்பவர்களுக்கு பச்சரிசியைத்தான் தானமாக கொடுப்பார்கள். உஞ்ச விருத்தி கேட்பவர்கள் இடுப்பில் இருக்கும் செம்பு நிரம்பிவிட்டால் இருப்பிடம் திரும்பிவிடுவார்கள். அன்றைக்குத் தேவையான தானியத்தை மட்டுமே யாசகமாகப் பெற வேண்டும் என்பது உஞ்சவிருத்தியின் தாத்பரியம். இருபது வயதில் தனது தந்தையின் வழியில் உபன்யாசம் படிக்கப் புறப்பட்ட திருச்சி கல்யாணராமன் கடந்த நாற்பது ஆண்டுகளாக தினமும் உஞ்சவிருத்தி எடுத்து அதன்மூலம் கிடைக்கும் பச்சரிசியைத்தான் சமைத்து உண்கிறார். “ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற மகான்கள் எல்லாம் உஞ்சவிருத்தி எடுத்தார்கள். நான் வெளியூர்களுக்குப் போனால் ஓட்டல்களில் தங்குவதில்லை. முதியோர் இல்லங்கள் தான் நமக்குச் சொர்க்கம். உஞ்சவிருத்தி எடுப்பவர்கள் செம்பு நிரம்பிவிட்டால் அதற்கு மேல் தானம் கேட்கக்கூடாது. ஆனால், நான் ஒரு தெருவில் இறங்கினால் இரண்டு மூட...

அரிது அரிது

"அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது அதனினும் தானமும் தவமும் பெறுதல் அரிது தவம் பெற்றவர்க்கே வானவர் நாடுவழிதிறந்திடுமே." - ஔவை தவமே ஞானத்தைத் தரும். ஞானமே உண்மையான அமைதியைத் தரும். தொடர்ந்த பிறப்பால் சலித்து பிறவாநிலையை மனம் நாடும் போது, அதற்கான உபாயங்களாக நம் சித்தர்களும் ஞானிகளும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நாலு வழிகளைக் காட்டுகிறார்கள். இதில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்தாலும் மற்ற மூன்றும் தானே தொடரும். திருஞான சம்பந்தர் சரியை மார்க்கத்தையும், நாவுக்கரசர் கிரியை மார்க்கத்தையும், சுந்தரர் யோக மார்க்கத்தையும், மாணிக்கவாசகர் ஞான மார்க்கத்தையும் கடைபிடித்து வாழ்ந்து காட்டி மெய்நிலை அடைந்தார்கள். இந்த சரியையும், கிரியையும் வெளிப்படையானது. யோகமும் ஞானமும் மறை பொருளாக உள்ளது. தியானம் பயில விரும்புபவர்கள் இவைகளைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். சரியை - எந்நேரமும் இறை நம்பிக்கையோடு இருப்பது. பக்தியுடன் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகள் செய்வது. புராண, இதிகாசங்கள் படிப்ப...