Skip to main content

மனிதர்கள் எல்லோருமே ஞானிதான்

பாலுக்குள்ளே நெய் இருப்பது போல மனிதனுக்குள்ளே ஞானம் இருக்கிறது.

புளித்த பால் தயிராகிறது.

அதை சுழற்றி அடித்துக் கடைந்தால் வெண்ணெய் வெளிப்படுகிறது.

அதை நெருப்பில் உருக்கினால் நெய் கிடைக்கிறது.

இது அனுபவத்தின் வெளிப்பாடு.

உலகாயப் பொருள்களின் மீதுள்ள பற்று மனிதனை நெய் என்கிற ஞானத்தை அடையும் படிக்கு பக்குவப்படுத்துகிறது.

இது இயல்பு நிலை. ஆனால், மற்றவர்களுடைய அனுபவங்களை உற்றுப் பார்த்து தன்னை நெறிப்படுத்திக் கொள்ளும் பேரறிவாளர்களும் இருக்கிறார்கள்.

அவர்கள் உலகாயத்தின் பற்றுகளின் விளைவுகளை உணர்ந்து அதிலிருந்து விலகும் போது புத்தி கூர்மையுள்ள அவர்களுக்கு கடையப்படுவதற்கு தயிர் சித்தமாக இருக்கிறது.

தெய்வீக வாழ்க்கை அவர்களுக்கு உண்மை என்கிற அமுதத்தைத் திரட்டித் தருகின்றது.

முன்னது துன்பத்தில் உழன்றுப் பக்குவப்படுவது.

பின்னது பூரண இன்பத்தையும், துன்பங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தையும், நிரந்தர திருப்தியையும் பெற்றுத் தருகிறது.

உலகியல் எண்ணங்கள் மனதில் உள்ள வரை துன்பங்கள் தொடர்கதைதான். ஏனென்றால் அவர்களின் மனமானது சிதறிக் கிடக்கிறது. அதன் ஆற்றல்கள் பலவேறு திசைகளில் வீண்டிக்கப்படுகின்றன.

ஆனால், தெய்வீக எண்ணங்கள் நிரம்பிய மனதிற்கு இன்பமென்றும், துன்பமென்றும் பேதமில்லை.

அது எல்லாவற்றையும் அனுபவமாக ஏற்றுக் கொண்டு, அந்த அனுபவங்களையே படிகளாக்கி மேலேறிப் போய்க் கொண்டேயிருக்கும்.

இரண்டுக்கும் உள்ள வேறுபாடு இதுதான். உருக்கப்பட்ட உலோகத்தை ஒரு பாத்திரத்தில் ஊற்றினால், அது எப்படி அந்தப் பாத்திரத்தின் வடிவத்தைப் பெறுகிறதோ, அதுபோல, மனம் எதில் நிறைந்திருக்கிறதோ அதன் வடிவத்தைப் பெற்று விளைவுகளை அடைகிறது.

மனிதனின் எண்ணம் செயலாகிறது. செயல் பழக்கமாகிறது. பழக்கம் இயல்பு அல்லது குணமாக ஆகிறது. இயல்பு விளைவுகளைத் தருகிறது.

இப்போது முடிவு உங்கள் கைகளில். உங்களுக்கு வேண்டியதைத் தேர்ந்தெடுக்க உங்களுக்கு முழு உரிமை இருக்கிறது.

அது உங்கள் சுதந்திரம். அதன் விளைவுகளும், அனுபவங்களும் உங்களுக்குரியதே.

இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒருவர் வந்தார். அவர் சுவாமிகளை நமஸ்கரித்து விட்டு, '' ஐயா நீங்கள் பெரிய மகாத்மா.

எல்லாவற்றையும் துறந்த ஞானி. உங்களைப் போன்ற துறவிகள் தற்காலத்தில் யாரும் இல்லை. எனவே என்னை ஆசிர்வதித்து அருள வேண்டும்'' என்று பணிந்து நின்றார்.

இராமகிருஷ்ணர் அவரைக் கூர்ந்து பார்த்து விட்டு, நான் துறவியல்ல. நீயே துறவி. நான் எதையும் துறக்கவில்லை. நீதான் துறந்திருக்கிறாய் என்றார்.

அந்த மனிதர் அதிர்ச்சிக்கு உள்ளானார். ஸ்வாமி என்னை பரிகாசம் செய்கிறீர்கள்.

நான் மீளாத் துயரத்தில் வீழ்ந்து கிடக்கிறேன். எந்த ஆசையும் என்னை விட்டு நீங்கவில்லை. என்னிடம் ஆயிரக்கணக்கான ஆசைகளும், எதிர்பார்ப்புகளும் இருக்கின்றன. அதனால்தான் நான் உங்களையே நாடி வந்திருக்கிறேன்.

இப்படியிருக்க நான் எப்படித் துறவியாவேன் ? என்று கேட்டார்.

பரமஹம்சர் சிரித்தபடி நான் சொல்வது உண்மைதான். எனக்கு முன்பும் இரண்டு சாத்தியங்கள் இருக்கின்றது.

உனக்கு முன்பும் இரண்டு சாத்தியங்கள் இருக்கிறது. அவை என்னவென்றால், கடவுளும், உலகமுமே.

நான் கடவுளைத் தேர்வு செய்தேன். நீயோ, உலகத்தைத் தேர்வு செய்தாய். கடவுளை அடைவதே மனிதப் பிறப்பின் நோக்கம், அதுவே இயல்பு. எனவே நான் அதன்படி நடக்கின்றேன்.

நான் எதையும் விரும்பவும் இல்லை, துறக்கவும் இல்லை.

ஆனால், நீயோ அழகான, கவர்ச்சிமிக்க, பல கோடி மக்கள் விரும்பும் உலகத்தைத் தேர்ந்தெடுத்தாய். உண்மையில் அது அர்த்தமற்றது.

எனவே நீதான் அர்த்தமுள்ள, நம் இயல்பான விஷயத்தைத் துறந்து அர்த்தமற்ற, துன்பத்திற்குக் காரணமான உலகத்தைத் தேர்வு செய்திருக்கிறாய்.

எனவே நீதான் துறவி என்றார். மேலும், ஒரு வைரமும், கல்லும் பக்கம் பக்கம் இருக்க, நீயோ கல்லைத் தேர்ந்தெடுத்தாய். நானோ வைரத்தை தேர்ந்தெடுத்துள்ளேன்.

எனவே வைரத்தையே துறந்த நீதான் துறவி. நானல்ல, ஏனென்றால் நான் மதிப்பு மிக்க வைரத்தையல்லவா தேர்ந்தெடுத்துள்ளேன்.

ஆசை என்கிற விஷயத்தைப் பொருத்த வரை நாம் இருவரும் ஒரே நிலையில்தான் இருக்கிறோம்.

ஆனால், இலக்குதான் வேறு என்பதைப் புரிந்து கொள் என்றார்.

அந்த மனிதர் வாய் பேச முடியாமல் மௌனமாக நின்றார்.

அப்போது பரமஹம்சர் உன்னைக் குற்றப்படுத்துவதற்காகச் சொல்லவில்லை, உன்னை மேன்மைப்படுத்தவே சொன்னேன் என்றார்.

 மகான்களின் பார்வையின் கோணமே, பரிமாணமே வித்தியாசமாகத்தான் இருக்கும். அதனால்தான் அவர்கள் ஞானிகள்.

எனவே உலக வாழ்க்கை என்பது சிற்றின்பங்களும் அதன் விளவுகளாகத் துன்பங்களும் நிறைந்தது.

ஆன்மிக வாழ்வு என்பதோ ஒரு ஆனந்தமான அனுபவம்.

உண்மையில் கரைந்து போகத் துடிக்கும் நம் ஆன்மாவின் இயல்பு.

Comments

Popular posts from this blog

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்.

சித்தர் பட்டினத்தார் பாடல்... மனிதனாகப் பிறந்தவன் ஏராளமான பிழைகளைச் செய்கிறான். அந்தப் பிழைகளைப் பொறுத்து அருளும் படி ஈசனை வேண்ட வேண்டும். நிலையற்ற காரியங்களே பெரிதென்று எண்ணி அந்த மாயையில் மயங்கிவிடக் கூடாது. இதை ஒரு சிறந்த பாடல் மூலம் மக்களுக்கு உணர்த்துகிறார் பட்டினத்தார்... "கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்நின் ஐந்தெழுத்தை சொல்லாப் பிழையும் துதியாப்பிழையும் தொழாப் பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சி யேகம்பனே." இறைவனோடு மனிதன் கொள்ளவேண்டிய தொடர்பு பற்றி மிக அழகாக சொல்லி இருக்கிறார் பட்டினத்தார். பட்டினத்தார் சிறந்த சிவபக்தர். "நமசிவாய"என்ற ஐந்தெழுத்தையும் திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் இறை உண்மையை உணர முடியும் என்பதையும், பிழைகளை செய்தாலும் நெஞ்சம் கசிந்துருகி இறைவனை வேண்டினால் எல்லாப் பிழைகளையும் பொறுத்து அருள்வான் என்பதையும் இப்பாடலில் உணர்த்துகிறார். பேரின்பப் பெரும் பதவியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டினத்தார் சொல்லுகின்ற முறை தானே அழகாகும். ஆழமான கருத்துக்கள், அழகான ...

உஞ்ச விருத்தி என்பது என்ன?

தலையில் சிவப்பு வஸ்திரம் கட்டியபடி இடது இடுப்பில் செம்பையும் காலில் சலங்கையும் கட்டிக் கொண்டு கிருஷ்ண பஜனை பாடி வீடுவீடாய் சென்று தானம் கேட்பது தான் உஞ்ச விருத்தி. இப்படி வந்தால் கிருஷ்ண பகவானே தானம் கேட்டு வருவ தாக ஒரு ஐதீகம். உஞ்சவிருத்தி எடுப்பவர்களுக்கு பச்சரிசியைத்தான் தானமாக கொடுப்பார்கள். உஞ்ச விருத்தி கேட்பவர்கள் இடுப்பில் இருக்கும் செம்பு நிரம்பிவிட்டால் இருப்பிடம் திரும்பிவிடுவார்கள். அன்றைக்குத் தேவையான தானியத்தை மட்டுமே யாசகமாகப் பெற வேண்டும் என்பது உஞ்சவிருத்தியின் தாத்பரியம். இருபது வயதில் தனது தந்தையின் வழியில் உபன்யாசம் படிக்கப் புறப்பட்ட திருச்சி கல்யாணராமன் கடந்த நாற்பது ஆண்டுகளாக தினமும் உஞ்சவிருத்தி எடுத்து அதன்மூலம் கிடைக்கும் பச்சரிசியைத்தான் சமைத்து உண்கிறார். “ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற மகான்கள் எல்லாம் உஞ்சவிருத்தி எடுத்தார்கள். நான் வெளியூர்களுக்குப் போனால் ஓட்டல்களில் தங்குவதில்லை. முதியோர் இல்லங்கள் தான் நமக்குச் சொர்க்கம். உஞ்சவிருத்தி எடுப்பவர்கள் செம்பு நிரம்பிவிட்டால் அதற்கு மேல் தானம் கேட்கக்கூடாது. ஆனால், நான் ஒரு தெருவில் இறங்கினால் இரண்டு மூட...

அரிது அரிது

"அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது அதனினும் தானமும் தவமும் பெறுதல் அரிது தவம் பெற்றவர்க்கே வானவர் நாடுவழிதிறந்திடுமே." - ஔவை தவமே ஞானத்தைத் தரும். ஞானமே உண்மையான அமைதியைத் தரும். தொடர்ந்த பிறப்பால் சலித்து பிறவாநிலையை மனம் நாடும் போது, அதற்கான உபாயங்களாக நம் சித்தர்களும் ஞானிகளும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நாலு வழிகளைக் காட்டுகிறார்கள். இதில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்தாலும் மற்ற மூன்றும் தானே தொடரும். திருஞான சம்பந்தர் சரியை மார்க்கத்தையும், நாவுக்கரசர் கிரியை மார்க்கத்தையும், சுந்தரர் யோக மார்க்கத்தையும், மாணிக்கவாசகர் ஞான மார்க்கத்தையும் கடைபிடித்து வாழ்ந்து காட்டி மெய்நிலை அடைந்தார்கள். இந்த சரியையும், கிரியையும் வெளிப்படையானது. யோகமும் ஞானமும் மறை பொருளாக உள்ளது. தியானம் பயில விரும்புபவர்கள் இவைகளைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். சரியை - எந்நேரமும் இறை நம்பிக்கையோடு இருப்பது. பக்தியுடன் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகள் செய்வது. புராண, இதிகாசங்கள் படிப்ப...