Skip to main content

சிருஷ்டியும், சரீரமும்

*சிருஷ்டியும், சரீரமும் (தத்துவ) விளக்கம்!*

சிருஷ்டிக்கு முன்பு இந்த பிரபஞ்சம் பெயர்கள் ஏதுமில்லாத தனித்த பரப்பிரம்ம ஸ்வரூபமாகவே இருந்தது. சுத்தமான நிர்குண (குணங்கள் ஏதுமில்லாத) நிராகார நிர்விகார பரப்பிரம்மத்தில் மூலப் பிரக்ருதியென்னும் மாயை (மாயை – உண்மையற்றது) உண்டாயிற்று.

இது எப்படி என்றால் சாலைகளில் வாகனங்களில் செல்லும் போது சாலையில் நீர் வழிந்து ஓடிக்கொண்டிருக்கும் ஒரு தோற்றம் வெகு தூரத்தில் காணப்படும்.

அதுவே அந்த நீருக்கு மிக அருகில் சென்று பார்த்தால் அது ஒன்றுமே இல்லாத கானல் நீர் என்பது தெரியவரும்.
அதுபோல, இந்த பிரபஞ்சம் பார்வைக்கு இருப்பது போல தோன்றுகின்றது, ஆனால், உண்மையில் அது இல்லை.

இதைத்தான் மாயை என்று சாஸ்திரம் கூறுகின்றது.
இதுபோல உண்மையற்ற மூலப்பிரக்ருதி என்ற மாயை முதன் முதலில் பரப்பிரம்மத்திடம் இருந்து தோன்றியது.

அந்த மூலப்பிரக்ருதியிடமிருந்து வெண்மை, சிவப்பு மற்றும் கறுப்பு என்ற மூன்று வர்ணங்களுடன் கூடிய மூன்று சக்திகள் உருவாயிற்று.

இதில் வெண்மை நிறமே மாயா சக்தி, சிவப்பு நிறமே அவித்தியா சக்தி, மற்றும் கறுப்பு நிறமே ஆவரண, விக்ஷேப சக்தி எனப்படும்.

இந்த மாயா சக்தி சத்துவ குணம் பிரதானமாகக் கொண்டுள்ளதால், அதில் (பரப்பிரம்மம் பிரதிபலித்ததினால்) உண்டாகிய பிரதி பிம்பமே ஈஸ்வரன் என்று சொல்லப்படுகின்றது.

அந்த ஈஸ்வரனே ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழிலை செய்யக்கூடிய பிரமன், விஷ்ணு மற்றும் மஹேஸ்வரன் என்ற சம்மாரங்களைச் செய்துக் கொண்டிருப்பார்.

இதனை எப்படி எடுத்துக்கொள்ளலாம் என்றால் நீ கண்ணாடி முன்பு நின்று தலை வாரினால், எதிரில் கண்ணாடியில் தெரியும் உன்னுடைய பிம்பமும் தலை வாருகின்றது.

ஆனால் உண்மையில் அதை கண்ணாடியில் தெரியும் பிம்பம் செய்வதில்லை, நீதான் உண்மையில் தலை வாரிக்கொண்டிருக்கின்றாய்.

அதுபோல, உண்மையில் ஈஸ்வரன் இந்த முத்தொழிலைச் செய்வது போல தோன்றினாலும், அந்த பிரம்மம் இன்றி எதுவும் இல்லை.

மேலும், பிரம்மத்திலிருந்து முதலில் தோன்றிய மாயையிலிருந்து அவித்தையும் (அஞ்ஞானம்), அவித்தையிலிருந்து அஹங்காரம் என்னும் ஆவரண, விக்ஷேப சக்தியும், அதிலிருந்து சப்த (ஒலி), ஸ்பரிச (உணர்சி), ரூப (தோற்றம்), ரச (நீர்), கந்த (மணம்) எனும் ஐந்து தன்மாத்திரைகள் உண்டாகின.

இதிலிருந்து, சூட்சுமமாக (கண்ணிற்குத்தெரியாத) மண், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் என்ற பஞ்ச பூதங்கள் தோன்றின.

பிறகு இதிலிருந்து ஸ்தூல (கண்ணிற்கு தெரிகின்ற) மண், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் என்ற ஐந்து பூதங்களும் உண்டாகி, பூதங்கள் ஐந்தில் ஒவ்வொரு பூதத்திலிருந்து இரண்டு பூதங்களாகப் பிரிந்து, அவைகளில் பிரிந்த இரண்டு விதமான பஞ்ச பூதங்களில் ஒன்று அனைத்தும் சேர்ந்து சமஸ்டி, (ஒன்றாகவும்) யாகவும், மற்றொன்று வியஸ்டியாக (தனித்தனியாக) ஐந்து பூதங்களும் தோன்றின.

இதில், ஐந்து பூதங்களும் ஒன்றேயான சமஸ்டி பஞ்ச பூதங்கள் பிரபஞ்சமாயிற்று.

இரண்டாவதகாக பிரிந்த ஐந்து பூதங்களும் தனித்தனியாக அப்படியே வியஸ்டியாக உள்ள அந்த பஞ்ச பூதங்கள் இருபத்தைந்து தத்துவங்களாக உண்டாயிற்று.

அது எப்படியென்றால்,

இதுபோல, பஞ்சபூதங்களையும் சமஸ்டி, வியஸ்டி பாகங்களாகச் செய்து ஒரு பூதத்துடன் மற்றொரு பூதம் சேர்ந்தபோது இருபத்தைந்து தத்துவங்களாக ஜீவர்களுக்கு சரீர ரூபத்தை கொடுக்கின்றது.

இதை, ஈஸ்வரனால் படைக்கப்பட்ட பிரம்மா மேற்சொன்ன பஞ்ச பூதங்களையும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து சிசுவை உற்பத்தி செய்தனர்.

பஞ்ச பூதங்களின் ஆதார குணங்களாகிய இந்த தன்மாத்திரைகள், தனித்தனியே, சுத்தமான, கலப்பற்ற தெளிந்த நிலையிலும் விளங்குகின்றன. ஒன்றோடு ஒன்று கலந்துபட்ட நிலையிலும் விளங்குகின்றன.

அந்தக் கலப்பு ஒரு ருதத்துடன் நிகழ்கின்றது. 'ருதம்' என்றால் ஒருவகையான இயற்கை ஒழுங்கு.

அது எப்படியென்றால்,

முதல் ஆகாசத்தை இரண்டு பாகமாகச் செய்தார்.

அதில், முதல் பாகம் சமஸ்டி என்று சொல்லப்படும் ஒன்றாக வைத்துக்கொள்ளப்பட்டது.

மற்றொரு பகுதியை வியஸ்டி என்று சொல்லப்படும் தனித்தனி பஞ்ச பூதங்களாக வைத்துக் கொள்ளப்பட்டது.

அதில் முதல் பாகம் ஞாதா என்று சொல்லப்படுகின்ற அந்தக்கரணங்கள் ( மனம், புத்தி, சித்தம் அஹங்காரம் மற்றும் உள்ளம்) ஆயிற்று.

ஞாதா என்பது பிரம்மமும், பிரம்மத்தின் பிரதிபிம்பமும் கூடியதே.
(இதில் கண்ணாடி முன்பு நின்று தலை வாரும் நீ பிரம்மம் என்றால், கண்ணாடியில் தெரியும் உன்னைப் போன்றே உள்ள மற்றொரு உருவம் ஜீவன் என்று புரிவதற்காக இங்கு உவமானமாக சொல்லியுள்ளோம்.)

இந்த ஞாதாவை அக்ஷரனென்றும், க்ஷேத்திரஞ்ஞனென்றும், புருஷனென்றும் மற்றும் ஜீவனென்றும் அழைக்கப்படுகின்றது.

இரண்டாவது பாதி பாகமான வியஸ்டி ஆகாசத்தை நான்கு பாகமாகச் செய்து, அதில் முதல் பாகமான வியஸ்டி ஆகாசத்தை வாயுவுடன் சேர்த்த பொழுது, ஸங்கல்பம் (எண்ணங்கள்) என்னும் தத்துவம் உண்டாயிற்று.

இரண்டாவது பாகமான வியஸ்டி ஆகாசத்தை அக்கினியுடன் சேர்த்த பொழுது, புத்தி என்னும் தத்துவம் உண்டாயிற்று.

மூன்றாவது பாகமான வியஸ்டி ஆகாசத்தை நீருடன் சேர்த்த பொழுது, சித்தம் என்னும் தத்துவம் உண்டாயிற்று.

நான்காவது பாகமான வியஸ்டி ஆகாசத்தை மண்ணுடன் சேர்த்த பொழுது, அஹங்காரம் என்னும் தத்துவம் உண்டாயிற்று.

இந்த மனம், புத்தி, சித்தம் மற்றும் அஹங்காரம் என்னும் நான்கையுமே அந்தக்கரணம் என்று சொல்லப்படும்.

இதுபோல, வாயுவை இரண்டு பாகங்களாக பிரித்து, அதில் முதல் பாகம் சமஸ்டி என்று சொல்லப்படும்.

இரண்டாவது பாகம் வியஸ்டி என்று சொல்லப்படும்.

இதில் முதல் பாதி பாகம் சமஸ்டி வாயு வியானன் என்ற வாயுவாயிற்று.

இரண்டாவது பாதி பாகமான வியஸ்டி வாயுவை நான்கு பாகமாகச் செய்து, அதில் முதல் பாகமான வியஸ்டி வாயுவை, ஆகாசத்துடன் சேர்த்த பொழுது, சமானம் என்னும் வாயு உண்டாயிற்று.

இரண்டாவது பாகமான வியஸ்டி வாயுவை அக்கினியுடன் சேர்த்த பொழுது, உதானன் என்னும் வாயு உண்டாயிற்று.

மூன்றாவது பாகமான வியஸ்டி வாயுவை நீருடன் சேர்த்த பொழுது, பிராணன் என்னும் வாயு உண்டாயிற்று.

நான்காவது பாகமான வியஸ்டி வாயுவை மண்ணுடன் சேர்த்த பொழுது, அபானன் என்னும் வாயு உண்டாயிற்று.

இந்த வியானன், சமானன், உதானன், பிராணன் மற்றும் அபானன் என்று அந்து வாயுக்களும் எல்லா ஜீவராசிகளுக்கும் ஐந்து பிராணன்களாக உள்ளன.

இதுபோல, அக்னியை இரண்டு பாகங்களாக பிரித்து, அதில் முதல் பாகம் சமஸ்டி என்று சொல்லப்படும். இரண்டாவது பாகம் வியஸ்டி என்று சொல்லப்படும்.

இதில் முதல் பாதி பாகம் சமஸ்டி அக்னி, கண்கள் ஆயிற்று.

இரண்டாவது பாதி பாகமான வியஸ்டி அக்னியை நான்கு பாகமாகச் செய்து, அதில் முதல் பாகமான வியஸ்டி அக்னியை, ஆகாசத்துடன் சேர்த்த பொழுது, காதுகள் உண்டாயிற்று.

இரண்டாவது பாகமான வியஸ்டி அக்கினியை வாயுவுடன் சேர்த்த பொழுது, சரீரம் உண்டாயிற்று.

மூன்றாவது பாகமான வியஸ்டி அக்னியை நீருடன் சேர்த்த பொழுது, நாக்கு உண்டாயிற்று.

நான்காவது பாகமான வியஸ்டி அக்னியை மண்ணுடன் சேர்த்த பொழுது, மூக்கு உண்டாயிற்று.

இவ்வாறு அக்கினியை சமஸ்டி, வியஸ்டியாகச் செய்து, அதில் உண்டாகிய கண்கள், காதுகள், சரீரம், நாக்கு, மற்றும் மூக்கு என்ற இந்த ஐந்து இந்திரியங்களையும் “ஞானேந்திரியங்கள்” எனப்படும்.

இதுபோல, நீரை இரண்டு பாகங்களாக பிரித்து, அதில் முதல் பாகம் சமஸ்டி என்று சொல்லப்படும்.

இரண்டாவது பாகம் வியஸ்டி என்று சொல்லப்படும்.

இதில் முதல் பாதி பாகம் சமஸ்டி நீர் ரச தன்மாத்திரை ஆயிற்று. அதாவது ருசி அறிவதாயிற்று.

இரண்டாவது பாதி பாகமான வியஸ்டி நீரை நான்கு பாகமாகச் செய்து, அதில் முதல் பாகமான வியஸ்டி நீரை, ஆகாசத்துடன் சேர்த்த பொழுது, ஸப்தம் (ஒலி) உண்டாயிற்று.

இரண்டாவது பாகமான வியஸ்டி நீரை, வாயுவுடன் சேர்த்த பொழுது, ஸ்பரிசம் (தொடு உணர்ச்சி) உண்டாயிற்று.

மூன்றாவது பாகமான நீரை அக்னியுடன் சேர்த்த பொழுது, ரூபம் (பார்வை) உண்டாயிற்று.

நான்காவது பாகமான நீரை, மண்ணுடன் சேர்த்த பொழுது, கந்தம் (வாசனை) உண்டாயிற்று.

இவ்வாறு, ஸப்த, ஸபரிச, ரச, ரூப, கந்தமென்னும் ஐந்தும் “பஞ்ச தன்மாத்திரை”களென்று சொல்லப்படும்.

இதுபோல, மண்ணை (பிருத்வி) இரண்டு பாகங்களாக பிரித்து, அதில் முதல் பாகம் சமஸ்டி என்று சொல்லப்படும்.

இரண்டாவது பாகம் வியஸ்டி என்று சொல்லப்படும்.

இதில் முதல் பாதி பாகம் சமஸ்டி மண் மலத்தை வெளித்தள்ளும் குதம் (ஆசனவாய்) ஆயிற்று.

இரண்டாவது பாதி பாகமான வியஸ்டி மண்ணை நான்கு பாகமாகச் செய்து, அதில் முதல் பாகமான வியஸ்டி மண்ணை, ஆகாசத்துடன் சேர்த்த பொழுது, வாக்கு உண்டாயிற்று. அதாவது பேசுவதற்கு வாய் உண்டாயிற்று.

இரண்டாவது பாகமான வியஸ்டி மண்ணை வாயுவுடன் சேர்த்த பொழுது, பாணி (கை) உண்டாயிற்று.

மூன்றாவது பாகமான வியஸ்டி மண்ணை அக்னியுன் சேர்த்த பொழுது, நடக்கவும், நிற்கவும் பாதங்கள் உண்டாயிற்று.

நான்காவது பாகமான வியஸ்டி மண்ணை நீருடன் சேர்த்த பொழுது, குய்யம் உண்டாயிற்று.

அதாவது, ஆண், பெண்களுக்கு கண நேர சந்தோசத்தைக் கொடுக்கும் மர்மஸ்தானம் உண்டாயிற்று.

மேற்சொல்லிய வாக்கு, பாணி, பாதம், குய்யம் மற்றும் குதம் என்ற இவ்வைந்தும் “கர்மேந்திரியங்கள்” என்று அழைக்கப்படுகின்றன.

இதில், பஞ்ச பூதங்களைப் பாதிக்காமல் அகண்டமாக இருந்த முதல் பாதி பாகமான சமஸ்டி பாகமானது ஞாதா, வியானவாயு, கண்கள், ரசம் (ருசி), மற்றும் குதம் என்னும் ஐந்து தத்துவங்களாகப் பிறந்தன.

இரண்டாவது பாகமான வியஸ்டி பாகங்கள் ஒவ்வொவொன்றையும், நான்கு பாகங்களாகப் பிரித்து, அந்தந்த பூதங்களில் சேர்த்த பொழுது இருபது தத்துவங்கள் ஆயின.

இங்கு இந்த இருபது தத்துவங்களும், மேற்சொன்ன சமஸ்டி அந்து தத்துவங்களும் சேர்ந்து இருபத்தைந்து தத்துவங்களாக இந்த “சரீரம்” பிறந்தது.

மாயையால் உண்டாகிய பிரபஞ்சமும், இந்த மாயா (உண்மையற்ற) சரீரமும் நசிக்கும் பொழுது, அதனுடன் கூடவே, இந்த மாயா பிரபஞ்சமும் நசிந்து விடுகின்றது.

மறுபடியும் இந்த மாயா சரீரம் பிறக்கும் பொழுது, அதனுடன் கூடவே இந்த மாயா பிரபஞ்சமும் பிறக்கின்றது.

இவ்வாறு, இந்த மாயா சரீரம் பலதடவை பிறந்து, பிறந்து நசிப்பதனால் இந்த மாயா பிரபஞ்சமும் பலதடவை நம்முடன் கூடவே பிறந்து, பிறந்து மறைவு படுகின்றது.

இவ்விதம் நாம் அனேக கோடி ஜன்மங்களெடுத்துக் கொண்டே வந்து பிறகு பிரளயக்காலத்தில் நமது மனம் எவ்விடத்தில் தங்கியிருக்கின்றது என்றால்,

கடலிருந்து ஆவியான நீர் மழையாக பொழிந்து, நதியாக மாறி மீண்டும் கடலிலேயே கலந்து ஒன்றாவது போல,

சிறு புழு, பூச்சி மற்றும், தாவர ஜந்துக்கள் முதல் படைக்கும் பிரம்மா வரை எந்த பரப் பிரம்மத்திலிருந்து உண்டாயிற்றோ, அந்த பரப்பிரம்மத்திலேயே மறுபடியும் பிரளய காலத்தில் ஒடுங்கும்.

*ஓம் தத் சத்!*

நமது தர்மம் பல உண்மையான அர்த்தங்களை உள்ளடக்கியது இது மதம் அல்ல ஒரு அற்புதமான வாழ்க்கை முறை… “இதுவே சனாதன தர்மம்….

Comments

Popular posts from this blog

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்.

சித்தர் பட்டினத்தார் பாடல்... மனிதனாகப் பிறந்தவன் ஏராளமான பிழைகளைச் செய்கிறான். அந்தப் பிழைகளைப் பொறுத்து அருளும் படி ஈசனை வேண்ட வேண்டும். நிலையற்ற காரியங்களே பெரிதென்று எண்ணி அந்த மாயையில் மயங்கிவிடக் கூடாது. இதை ஒரு சிறந்த பாடல் மூலம் மக்களுக்கு உணர்த்துகிறார் பட்டினத்தார்... "கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்நின் ஐந்தெழுத்தை சொல்லாப் பிழையும் துதியாப்பிழையும் தொழாப் பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சி யேகம்பனே." இறைவனோடு மனிதன் கொள்ளவேண்டிய தொடர்பு பற்றி மிக அழகாக சொல்லி இருக்கிறார் பட்டினத்தார். பட்டினத்தார் சிறந்த சிவபக்தர். "நமசிவாய"என்ற ஐந்தெழுத்தையும் திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் இறை உண்மையை உணர முடியும் என்பதையும், பிழைகளை செய்தாலும் நெஞ்சம் கசிந்துருகி இறைவனை வேண்டினால் எல்லாப் பிழைகளையும் பொறுத்து அருள்வான் என்பதையும் இப்பாடலில் உணர்த்துகிறார். பேரின்பப் பெரும் பதவியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டினத்தார் சொல்லுகின்ற முறை தானே அழகாகும். ஆழமான கருத்துக்கள், அழகான ...

உஞ்ச விருத்தி என்பது என்ன?

தலையில் சிவப்பு வஸ்திரம் கட்டியபடி இடது இடுப்பில் செம்பையும் காலில் சலங்கையும் கட்டிக் கொண்டு கிருஷ்ண பஜனை பாடி வீடுவீடாய் சென்று தானம் கேட்பது தான் உஞ்ச விருத்தி. இப்படி வந்தால் கிருஷ்ண பகவானே தானம் கேட்டு வருவ தாக ஒரு ஐதீகம். உஞ்சவிருத்தி எடுப்பவர்களுக்கு பச்சரிசியைத்தான் தானமாக கொடுப்பார்கள். உஞ்ச விருத்தி கேட்பவர்கள் இடுப்பில் இருக்கும் செம்பு நிரம்பிவிட்டால் இருப்பிடம் திரும்பிவிடுவார்கள். அன்றைக்குத் தேவையான தானியத்தை மட்டுமே யாசகமாகப் பெற வேண்டும் என்பது உஞ்சவிருத்தியின் தாத்பரியம். இருபது வயதில் தனது தந்தையின் வழியில் உபன்யாசம் படிக்கப் புறப்பட்ட திருச்சி கல்யாணராமன் கடந்த நாற்பது ஆண்டுகளாக தினமும் உஞ்சவிருத்தி எடுத்து அதன்மூலம் கிடைக்கும் பச்சரிசியைத்தான் சமைத்து உண்கிறார். “ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற மகான்கள் எல்லாம் உஞ்சவிருத்தி எடுத்தார்கள். நான் வெளியூர்களுக்குப் போனால் ஓட்டல்களில் தங்குவதில்லை. முதியோர் இல்லங்கள் தான் நமக்குச் சொர்க்கம். உஞ்சவிருத்தி எடுப்பவர்கள் செம்பு நிரம்பிவிட்டால் அதற்கு மேல் தானம் கேட்கக்கூடாது. ஆனால், நான் ஒரு தெருவில் இறங்கினால் இரண்டு மூட...

அரிது அரிது

"அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது அதனினும் தானமும் தவமும் பெறுதல் அரிது தவம் பெற்றவர்க்கே வானவர் நாடுவழிதிறந்திடுமே." - ஔவை தவமே ஞானத்தைத் தரும். ஞானமே உண்மையான அமைதியைத் தரும். தொடர்ந்த பிறப்பால் சலித்து பிறவாநிலையை மனம் நாடும் போது, அதற்கான உபாயங்களாக நம் சித்தர்களும் ஞானிகளும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நாலு வழிகளைக் காட்டுகிறார்கள். இதில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்தாலும் மற்ற மூன்றும் தானே தொடரும். திருஞான சம்பந்தர் சரியை மார்க்கத்தையும், நாவுக்கரசர் கிரியை மார்க்கத்தையும், சுந்தரர் யோக மார்க்கத்தையும், மாணிக்கவாசகர் ஞான மார்க்கத்தையும் கடைபிடித்து வாழ்ந்து காட்டி மெய்நிலை அடைந்தார்கள். இந்த சரியையும், கிரியையும் வெளிப்படையானது. யோகமும் ஞானமும் மறை பொருளாக உள்ளது. தியானம் பயில விரும்புபவர்கள் இவைகளைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். சரியை - எந்நேரமும் இறை நம்பிக்கையோடு இருப்பது. பக்தியுடன் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகள் செய்வது. புராண, இதிகாசங்கள் படிப்ப...