Skip to main content

கன்னியாகுமரி மூக்குத்தி வரலாறு

கன்னியாகுமரி பகவதி அம்மன் மூக்குத்தி வரலாறு....
         
               திருவிதாங்கூர் மகாராஜாவின்           ஆட்சியில் கன்னியாகுமரி பகுதி இருந்த காலம். அந்த காலத்தில் பனையேறி ஒருவன் இருந்தான். அவனுக்கு தனக்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை. ஆனால் அவன் மனைவி ஒவ்வொரு முறை கருவுறும் போதும் அவனுக்கு பெண் குழந்தை மட்டுமே பிறந்து கொண்டு இருந்தது. ஒவ்வொரு முறையும் அவன் மனைவிக்கு பிரசவம் ஆனதும் அவன் முதல் மகள் தான் அவனிடம் வந்து குழந்தை பிறந்த செய்தியை சொல்லுவாள்.
                இப்படியே அவனுக்கு 5 பெண் குழந்தைகள் பிறந்து விட்டன. இதனால் மனம் வருந்திய அவன் இனி நமக்கு பெண் குழந்தை பிறந்தது என்று நம் மகள் வந்து நம்மிடம் சொல்லும் போது நாம் பனையின் உச்சியில் இருந்தால் அப்படியே இரண்டு கைகளையும் மரத்தில் இருந்து விடுவித்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தான்.
                 இந்நிலையில் அவன் மனைவி 6வது முறையாக கருவுற்றாள். அப்போது வழக்கம் போல் அவனது முதல் பெண் ஓடி வந்து அப்பா அம்மாக்கு பிரசவம் ஆயிடுச்சு தங்கை பிறந்துருக்கா என்று சொன்னாள். ஆனால் அந்த நேரம் இவன் பனையில் இருந்து கீழே இறங்கி இருந்தான். அதனால் அவனால் உடனே தற்கொலை செய்ய முடியவில்லை.
                 7வது முறையும் இவன் பனையில் இருந்து இறங்கிய பிறகே முதல் மகள் வந்து பெண் குழந்தை பிறந்திருக்கும் செய்தியை சொன்னாள். இந்நிலையில் அவன் மனைவி 8வது முறை கருவுற்றாள். இம்முறையும் அவன் பனையை விட்டு இறங்கிய பிறகே அவன் மூத்த மகள் வந்து 8வதாக பெண் பிறந்த செய்தியை சொல்ல, மனம் வெறுத்து போன அவன் இனி நாம் உயிர் வாழவே கூடாது என முடிவு செய்து அருகில் இருந்த பாம்பு புற்றில் தன் கையை விட்டான். பாம்பு கடித்து விடும் நாம்  உயிரை விட்டு விடலாம் என்பது அவன் எண்ணம்.
                   ஆனால் அம்பாளின் விருப்பம் வேறாக இருந்தது. அவன் புற்றின் உள்ளே கையை விட்டதும் கையில் ஏதோ சூடு பட்டது போல உணர்ந்தான். சூடு தாங்க முடியாமல் கையை வேகமாக வெளியே இழுத்து பார்க்கும் போது அவன் கையில் ஏதோ ஒன்று தக தகவென மின்னியது. புற்றில் இருந்த முதிர்ந்த நாகம் அவன் கையில் நாகரத்தினத்தை உமிழ்ந்து இருந்தது.
               அது என்னவென்று அறியாத அவன் அதனை உடனே கொட்டாரத்திற்கு  (அரண்மனைக்கு)  கொண்டு சென்றான். அதை மஹாராஜாவிடம் கொடுத்தான். உடனே அதை பெற்று கொண்ட மகாராஜா அவரது குதிரையை அவிழ்த்து விட்டு அது எவ்வளவு தூரம் ஓடுகிறதோ அவ்வளவு இடத்தையும் அவன் பெயரில் எழுதி வைக்க சொன்னார். அவனும் மகிழ்ச்சியோடு அதை பெற்று கொண்டு வீட்டுக்கு சென்றான்.
               அன்றிரவு மன்னரின் கனவில் ஒரு சின்னஞ்சிறு பெண் சென்று மன்னா ! இன்று காலை அரண்மனை தர்பாரில் உன்னிடம் ஒருவன் நாகரத்தினம் கொண்டு வந்து தந்தானே அதை நீ வாங்கி வைத்து கொண்டாயே ! அந்த நாகரத்தினத்தில் எனக்கு ஒரு மூக்குத்தியும், பில்லாக்கும் செய்து தர கூடாதா? என்று கேட்டு விட்டு மறைந்து விட்டாள்.
                  திருவிதாங்கூர் மன்னர் மறுநாள் காலையில் நம்பூதிரிகளை வரவழைத்து தான் இரவு கண்ட கனவை கூறி அந்த சிறு பெண் யார் என பிரசன்னம் வைத்து கண்டு பிடிக்கும் படி கூறினார். நம்பூதிரிகள் பிரசன்னம் வைத்து பார்க்கும் போது அது வேறு யாரும் அல்ல கன்னியாகுமரி பகவதி அம்மன் தான் என்பது தெரிய வந்தது.
           நம்பூதிரிகள் கூறியதை கேட்ட    மன்னர் உடனடியாக தேவி கன்னியாகுமரி பகவதிக்கு நாகரத்தினத்தில் மூக்குத்தியும், பில்லாக்கும் செய்து கொடுத்தார். அது தான் இன்றும் அன்னை அணிந்து கொண்டு இருக்கிறாள். நாகரத்தினம் என்பதால் அது தக தகவென ஜொலிக்கும். கப்பலோட்டிகள் அம்பாளின் மூக்குத்தி வெளிச்சத்தை கலங்கரை விளக்க ஒளி என்று எண்ணியதால் கப்பல் திசை மாறி வந்த காரணத்தால் கோவிலின் கிழக்கு வாசல் அடைக்கப்பட்டு தெற்கு வாசல் வழியாக சென்று தான் தேவியை தரிசனம் செய்ய முடியும். அம்பாளின் கருணை முகத்தை கண்டால் நம்மால் அவள் சந்நிதியில் இருந்து திரும்பி வர மனம் வராது.
            விளக்கொளியில் மூக்குத்தி ஜொலிக்க கன்னியாக,  அன்னையாக எல்லோருக்கும் அருள் புரிந்து வருகிறாள் எனது இஷ்ட தெய்வம் கன்னியாகுமரி பகவதி அம்மன். அன்னையின் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும். அவள் கருணையினால் உலகம் இந்த கொடிய நோயில் இருந்து மீண்டு வரட்டும். 
      அம்மே சரணம் ! தேவி சரணம் !

Comments

Popular posts from this blog

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்.

சித்தர் பட்டினத்தார் பாடல்... மனிதனாகப் பிறந்தவன் ஏராளமான பிழைகளைச் செய்கிறான். அந்தப் பிழைகளைப் பொறுத்து அருளும் படி ஈசனை வேண்ட வேண்டும். நிலையற்ற காரியங்களே பெரிதென்று எண்ணி அந்த மாயையில் மயங்கிவிடக் கூடாது. இதை ஒரு சிறந்த பாடல் மூலம் மக்களுக்கு உணர்த்துகிறார் பட்டினத்தார்... "கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்நின் ஐந்தெழுத்தை சொல்லாப் பிழையும் துதியாப்பிழையும் தொழாப் பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சி யேகம்பனே." இறைவனோடு மனிதன் கொள்ளவேண்டிய தொடர்பு பற்றி மிக அழகாக சொல்லி இருக்கிறார் பட்டினத்தார். பட்டினத்தார் சிறந்த சிவபக்தர். "நமசிவாய"என்ற ஐந்தெழுத்தையும் திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் இறை உண்மையை உணர முடியும் என்பதையும், பிழைகளை செய்தாலும் நெஞ்சம் கசிந்துருகி இறைவனை வேண்டினால் எல்லாப் பிழைகளையும் பொறுத்து அருள்வான் என்பதையும் இப்பாடலில் உணர்த்துகிறார். பேரின்பப் பெரும் பதவியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டினத்தார் சொல்லுகின்ற முறை தானே அழகாகும். ஆழமான கருத்துக்கள், அழகான ...

உஞ்ச விருத்தி என்பது என்ன?

தலையில் சிவப்பு வஸ்திரம் கட்டியபடி இடது இடுப்பில் செம்பையும் காலில் சலங்கையும் கட்டிக் கொண்டு கிருஷ்ண பஜனை பாடி வீடுவீடாய் சென்று தானம் கேட்பது தான் உஞ்ச விருத்தி. இப்படி வந்தால் கிருஷ்ண பகவானே தானம் கேட்டு வருவ தாக ஒரு ஐதீகம். உஞ்சவிருத்தி எடுப்பவர்களுக்கு பச்சரிசியைத்தான் தானமாக கொடுப்பார்கள். உஞ்ச விருத்தி கேட்பவர்கள் இடுப்பில் இருக்கும் செம்பு நிரம்பிவிட்டால் இருப்பிடம் திரும்பிவிடுவார்கள். அன்றைக்குத் தேவையான தானியத்தை மட்டுமே யாசகமாகப் பெற வேண்டும் என்பது உஞ்சவிருத்தியின் தாத்பரியம். இருபது வயதில் தனது தந்தையின் வழியில் உபன்யாசம் படிக்கப் புறப்பட்ட திருச்சி கல்யாணராமன் கடந்த நாற்பது ஆண்டுகளாக தினமும் உஞ்சவிருத்தி எடுத்து அதன்மூலம் கிடைக்கும் பச்சரிசியைத்தான் சமைத்து உண்கிறார். “ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற மகான்கள் எல்லாம் உஞ்சவிருத்தி எடுத்தார்கள். நான் வெளியூர்களுக்குப் போனால் ஓட்டல்களில் தங்குவதில்லை. முதியோர் இல்லங்கள் தான் நமக்குச் சொர்க்கம். உஞ்சவிருத்தி எடுப்பவர்கள் செம்பு நிரம்பிவிட்டால் அதற்கு மேல் தானம் கேட்கக்கூடாது. ஆனால், நான் ஒரு தெருவில் இறங்கினால் இரண்டு மூட...

அரிது அரிது

"அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது அதனினும் தானமும் தவமும் பெறுதல் அரிது தவம் பெற்றவர்க்கே வானவர் நாடுவழிதிறந்திடுமே." - ஔவை தவமே ஞானத்தைத் தரும். ஞானமே உண்மையான அமைதியைத் தரும். தொடர்ந்த பிறப்பால் சலித்து பிறவாநிலையை மனம் நாடும் போது, அதற்கான உபாயங்களாக நம் சித்தர்களும் ஞானிகளும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நாலு வழிகளைக் காட்டுகிறார்கள். இதில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்தாலும் மற்ற மூன்றும் தானே தொடரும். திருஞான சம்பந்தர் சரியை மார்க்கத்தையும், நாவுக்கரசர் கிரியை மார்க்கத்தையும், சுந்தரர் யோக மார்க்கத்தையும், மாணிக்கவாசகர் ஞான மார்க்கத்தையும் கடைபிடித்து வாழ்ந்து காட்டி மெய்நிலை அடைந்தார்கள். இந்த சரியையும், கிரியையும் வெளிப்படையானது. யோகமும் ஞானமும் மறை பொருளாக உள்ளது. தியானம் பயில விரும்புபவர்கள் இவைகளைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். சரியை - எந்நேரமும் இறை நம்பிக்கையோடு இருப்பது. பக்தியுடன் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகள் செய்வது. புராண, இதிகாசங்கள் படிப்ப...